நல்லூருடன் YARL IT HUB இன் திருவிழாப் பயணம்.

Yarl IT Hub
3 min readSep 14, 2022

--

இவ் வருடத்திற்கான நல்லூர்த் திருவிழா தற்போது நடைபெற்று நிறைவு பெற்றுள்ளது. கடந்த வருடங்களில் பல்வேறுபட்ட காரணங்களால் குறைந்திருந்த கோலாகலத்தையும் சேர்த்து இம்முறை வெகுவிமர்சையாக ஆரம்பித்து நடைபெற்று முடிந்துள்ளது. ஆவணி மாதம் என்றாலே அது நல்லூர் திருவிழாவிற்குப் பெயர் போன மாதம் தான். உலகின் வெவ்வேறு மூலைகளில் சிதறிக் கிடக்கும் குடும்பங்கள், நண்பர்கள் என அனைவரும் ஆண்டுதோறும் இணைவது நல்லூரானின் இந்த 25 நாள் திருவிழாவில் தான்.

அந்த வகையிலே இந்த திருவிழா காலத்தில், ‘யாழ் ஐரி கப்’ தனது கவனத்தை நல்லூரான் திருவிழாவின் பக்கம் திருப்பி, நல்லூரிலே ஒரு காட்சி அறையினை ஒழுங்கமைத்திருந்தது. ஒவ்வொரு நாளும் இக் காட்சி அறையானது மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்த வண்ணம் காணப்பட்டது.

அப்படி என்னதான் நடைபெற்றது இந்த யாழ் ஐரி கப்பின் காட்சி அறையில்? சிறுவர்களுக்காக ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான விளையாட்டுக்கள், அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் புத்தாக்கங்களை உருவாக்குதல் போன்றனவும் இளைஞர் யுவதிகளுக்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான புதிர் வேட்டையும் இடம்பெற்றது. பரிசில்கள் என்றால் யாருக்கு தான் விருப்பமில்லை. இதனால் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி போட்டிகளிலே கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிக்காட்டி பரிசில்களை தட்டிச் சென்றுள்ளனர்.

முதல் நாள் போட்டிகளில் பங்குபற்றி அப் போட்டிகளில் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக மீண்டும் மீண்டும் வந்து பங்குபற்றியது விளையாட்டுகளின் சுவாரஸ்யங்களை காட்டுவதாக அமைந்திருந்தது.

திறன்களை வெளிப்படுத்த உருவாக்கப்பட்டிருந்த செயற்பாடுகளில் ஒவ்வொருநாளும் அதிகளவான சிறார்கள் பங்குபற்றியிருந்தனர். அத்துடன் பங்குபற்றியவர்கள் அடுத்த முறை வருகை தரும்போது செயற்பாடுகளில் பங்குபற்ற தன்னுடன் இன்னொருவரையும் அழைத்து வருவதை காணக்கூடியதாக இருந்தது.

புதிர் வேட்டையில் பங்குபற்றி சரியான விடையளித்தவர்களில் ஒருவர் குலுக்கல் முறையில் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு அவருடைய பெயர், பெயர் பலகையில் இடம்பெற்றது. இதனால் ஒவ்வொருவரும் ஆர்வத்துடன் புதிர் வேட்டையில் பங்கு பற்றி தமது பெயரும், பெயர் பலகையில் வந்துள்ளதா? என்பதனை தெரிந்து கொள்வதற்காக தினமும் வருகை தந்து அடுத்த நாளுக்கான போட்டியிலும் பங்குபற்றினர்.

நல்லூரானின் 22ஆம் திருவிழா அன்று ‘யாழ் ஐரி கப்’ இன் காட்சி அறையில் புதையல் வேட்டை எனும் போட்டியும் நடாத்தப்பட்டது. இதில் நல்லூர் ஆலயச் சூழலில் உள்ள அடையாளக் குறிப்புக்களை வைத்து வினாக்கள் தொகுக்கப்பட்டிருந்தன. அவ்வினாக்களில் உள்ள முடிச்சை அவிழ்த்து வினாக்கலிலுள்ள குறிப்பை கண்டுபிடிக்க வேண்டும். இவ்வாறு வினைத்தொகுப்பின் இறுதியில் உள்ள சொல்லை கண்டறிந்து ‘யாழ் ஐரி கப்’ இன் காட்சி அறைக்கு வந்து கூறவேண்டும். இப் போட்டியில் பல அணிகள் பங்குபற்றி தமது ஆர்வத்தை வெளிப்படுத்தினார்கள். புதையல் வேட்டை பார்ப்பவர்ககளுக்கு சுவாரஸ்யத்தை ஊட்டியது. இறுதியில் 7 அணிகள் நிறைவு செய்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசில்கள் வழங்கப்பன.

இறுதி நாட்களில் வழமையான நிகழ்வுகளுடன் சிறுவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்த கதைசொல்லல், பாடுதல் விடுகதை சொல்லல் போன்ற சுவாரசியமான நிகழ்வுகளும் இடம்பெற்றன.

வெற்றியாளர்களுக்கு பரிசில் வழங்கும் நிகழ்வு

நல்லூர்த் திருவிழாக் கால காட்சியறையில் நடத்தப்பட்ட போட்டிகளில் பரிசில் வழங்கும் நிகழ்வு ஆகஸ்ட் 27ஆம் திகதி மலை 3.00 மணிக்கு யாழ் ஐரி கப்பின் ஹட்ச் களத்தில் நடைபெற்றது. இதில் புதிர் வேட்டை மற்றும் புதையல் வேட்டையில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டது.

நல்லூருடன் YARL IT HUB இன் திருவிழாப் பயணம் பற்றிய மக்களின் அனுபவ பகிர்வுகள்.

*கடந்த வருடங்களில் நடைபெற்ற நல்லூர் திருவிழாவில் நல்லூரானை மட்டும் தரிசித்தது வீதிகளில் உள்ள கடைகளை மட்டுமே அலசிக் சென்றோம். ஆனால் இம் முறை ‘யாழ் ஐரி கப்’ இன் காட்சி அறைக்கு சென்று அங்கே இடம்பெற்ற விளையாட்டுக்கள், புதிர் வேட்டைகளில் கலந்து கொண்டு பரிசில்களை பெற்று எனது திறமையை வெளிக்காட்டியுள்ளேன். இது எனக்கு ஓர் வித்தியாசமான உணர்வை அளித்துள்ளது.

*முதல் நாள் ‘யாழ் ஐரி கப்’ இன் காட்சி அறையில் நடைபெற்ற விளையாட்டுகளில் கலந்து கொண்ட நான் சிறப்பாக அவ் விளையாட்டை செய்யாமையால் கவலையாக இருந்தேன். எனது அம்மாவிடம் அவ் விளையாட்டுகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி வீட்டிலே பயிற்சி எடுத்து விட்டு மறுநாள் அவ் விளையாட்டில் பங்குபற்றி வெற்றியடைந்தேன். அப்போது எனக்கு சந்தோசமாக இருந்தது.

*‘யாழ் ஐரி கப்’ இன் காட்சி அறையில் இடம்பெற்ற விளையாட்டுக்கள், புத்தாக்கங்கள், புதிர் வேட்டைகள் எனது திறமையை வெளிப்படுத்த ஓர் சிறந்த களமாக அமைந்திருந்தது.

*நல்லூர் திருவிழா என்றதும் கோவிலுக்குள் கூட செல்லாமல் வீதிகளில் உள்ள கடைகளை பார்க்கவே நான் வழமையாக செல்வேன். ஆனால் இவ் வருடம் கடைகளை சுற்றி பார்த்ததுடன் எவ் வருடமும் இல்லாத புத்தம் புதிய காட்சி அறையான ‘யாழ் ஐரி கப்’ இன் காட்சி அறைக்கு சென்றேன். அங்கே இடம்பெற்ற விளையாட்டுக்கள், புத்தாக்கங்கள், புதிர் வேட்டைகள் எனக்கு வித்தியாசமான உணர்வை தந்தது. அவ் நிகழ்வுகளில் நானும் கலந்து கொண்டேன்.

*‘யாழ் ஐரி கப்’ இன் காட்சி அறையிலே புகைப்படம் எடுப்பதற்காக ஓர் இடம் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. நான் புகைப்படம் எடுப்பதற்காக அங்கே சென்றேன்.ஆனால் உள்ளே பல்வேறுபட்ட விளையாட்டுக்கள், புத்தாக்கங்கள், புதிர் வேட்டைகள் இடம்பெற்று பரிசில்களும் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. சரி நானும் சென்று பங்குபற்றுவோம் என்று சென்றேன். நானே வியந்து போகும் அளவிற்கு இவ்வளவு திறமை எனக்குள் இருக்கிறதா? என ஆச்சரியப்பட வைத்தது. ‘யாழ் ஐரி கப்’ இன் காட்சி அறை.

‘யாழ் ஐரி கப்’ திருவிழாக் காலக் காட்சியறையானது வயது வேறுபாடின்றி அனைவரையும் கவர்ந்ததோடு அனைவருக்கும் பயனுள்ளவகையில் “யாழ் ஐரி கப்” இன் செயற்பாடுகள் பற்றி மேலும் அறிந்து கொள்ளும் ஆர்வத்தை தூண்டுவதாகவும் அமைந்திருந்தது. இப்பயணமானது நல்லூரானின் திருவிழாவோடு இணைந்த சிறப்பானதொரு ‘யாழ் ஐரி கப்’ திருவிழாப் பயணமாக அமைந்தது.

--

--

Yarl IT Hub

Yarl IT Hub is a not for profit social enterprise focused on fostering innovation, entrepreneurship and technology in Jaffna.