புதிய பயணங்கள் செயற்றிட்டத்தின் பயணப்பாதை

புதிய பயணங்கள் பற்றிய அறிமுகத்தை இங்கே வாசித்து அறியுங்கள்.

இச்செயற்றிட்டம், கடந்த டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை நிலை ஒன்று வழிக்காட்டுதல் புத்தகங்கள் வடமாகாணம் முழுவதிலும் உள்ள எண்பதிற்கும் மேலான பாடசாலைகளின் மாணவர்களுக்கு வழங்கி ஆரம்பிக்கப்பட்டது.

புதிய பயணங்கள் செயற்றிட்டத்தின் மூன்று நிலைகள் பற்றிய சிறு பார்வை

நிலை ஒன்று(Level-1)

“இப் பயணத்தின் மூலம் சூழல்,அன்றாட வாழ்வியல் மற்றும் கோட்பாடுகளை அவதானிப்போம் அறிவோம்,செயற்படுத்துவோம் “

நிலை- 1 ஏழு செயற்பாடுகளைக் கொண்டது. தமது வீட்டில் இருக்கும் சிறு பொருட்களைக் கொண்டும் சூழலை அவதானித்தும் தங்கள் சொந்த எண்ணக்கருக்களைப் பயன்படுத்தியும் செயற்பாடுகளைச் செய்து மாணவர்கள் எங்களுடன் பகிர்ந்தார்கள். அவர்கள் தம் முழு ஈடுபாட்டுடனும் ஆர்வத்துடனும் நிலை 1 செயற்றிட்டத்தில் பங்கு கொண்டனர். நிலை 1 இன் கோட்பாடானது இப்பயணத்தின் மூலம் சூழல், அன்றாட வாழ்வியல் மற்றும் கோட்பாடுகளை அவதானித்து, அறிந்து, மாணவர்கள் செயற்படுத்துவதே ஆகும். 1260 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் 11 வலயங்களில் இருந்து நிலை ஒன்றை வெற்றிகரமாக நிறைவு செய்து இரண்டாம் நிலைக்குத் தெரிவு செய்யப்பட்டார்கள்.

பல மாணவர்கள் தாமாகவே ஆர்வத்துடன் இச் செயற்பாடுகளை முயற்சி செய்ததை நாங்கள் அவதானிக்க கூடியதாக இருந்தது. மேலும் சில மாணவர்கள் தமது நண்பர்களுக்கு நிலை இரண்டு புத்தகம், பரிசில் பொதி மற்றும் சான்றிதழ் கிடைக்கப்பெற்றதைப் பார்த்து தாங்களும் நிலை ஒன்று புத்தகத்தில் இருக்கும் செயற்பாடுகளை தாமாகவே முன்வந்து ஆர்வத்துடன் முயற்சித்து பகிர்ந்தனர்.

இச் செயற்பாடுகள் அனைத்தும் , மாணவர்கள் மத்தியில் ஒரு நேர்மறையான மாற்றத்தினை அவர்களின் ஊடாகவே உருவாக்கலாம் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது. இவ்வாறான செயற்றிட்டத்தின் மூலம் யாழ் ஐரி கப் மாணவர்களிடம் சுய கற்றலை ஊக்குவிற்க முயற்சிக்கின்றது.

 1. விபோனாசி சுருளை இயற்கையில் அவதானித்தல்
 2. விதை முளைப்பதை அவதானித்தல்
 3. உணவுச்சிட்டை/ மூலப்பொருள் ஆரோக்கியம்
 4. பைதகரஸ் கிண்ணம்
 5. இயற்கையில் இருக்கும் அமில காரங்களை ஆராய்தல்
 6. சைக்கிள் மிதிப்பதன் ஊடாக எவ்வாறு முன்னோக்கிச் செல்கின்றது?
 7. பழங்கள்/ மரக்கறிகள் பழுப்பு நிறமாகாமல் பேணுவது எப்படி?

நிலை இரண்டு (Level-2)

“இயற்கையோடு இணைந்து பசுமைச்சூழல் மற்றும் சக்தி வளங்களை ஆராய்வோம்,அறிவோம் ,செயற்படுத்துவோம்”

நிலை 1 செயற்பாடுகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு நிலை 2 இற்கான வழிகாட்டுதல் புத்தககங்கள் மற்றும் பரிசுப் பொதிகள் அனுப்பி வைக்கப்பட்டன.

நிலை இரண்டில் பசுமை எண்ணக்கரு, நிலைபெறு உலகைக் கட்டியமைக்க அவர்கள் கடைப் பிடிக்க, நினைவில் கொள்ளக் கூடிய விடயங்களும், இயற்கைச் சக்தி வளங்களும் அறிமுகப்படுத்தப்பட்டது. அத்தோடு, இவைதொடர்பான மாதிரிகள் மற்றும் புத்தாக்கங்கள் செய்வதற்கும் மாணவர்கள் உற்சாகப்படுத்தப்பட்டார்கள். சுமார் 1260 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் நிலை ஒன்றை பூர்த்தி செய்து நிலை இரண்டிற்கான வழிகாட்டல் புத்தகம் மற்றும் பரிசில் பொதிகளை பெற்றுக்கொண்டனர்.

1. காலநிலை மாற்றமும் பூகோள வெப்பமயமாதலும்

2. சக்தி வடிவங்கள்

3. இயற்கை வளங்களின் நிலையான பயன்பாடு

4. கழிவுகளை குறைத்தல், மீள்பயன்பாடு — செய்தித் தாளிலான படைப்புகள்

5. செயற்கையான சூழல் மற்றும் பசுமை எண்ணக்கரு (Artificial Environment and Green concept )

நிலை மூன்று (Level-3)

”தொழில்நுட்ப உலகில் வன்பொருட்கள் மற்றும் மென்பொருட்கள் போன்றவற்றை அறிவோம்,ஆராய்வோம்,செயற்படுத்துவோம்”

நிலை 2 செயற்பாடுகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு நிலை 3 இற்கான வழிகாட்டுதல் புத்தககங்கள் மற்றும் பரிசுப் பொதிகள் அனுப்பி வைக்கப்பட்டன. இப் பரிசுப்பொதி ஆர்டினோ மற்றும் பல மின் கூறுகளை உள்ளடக்கியதாகும். மாணவர்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் இலத்திரனியலை அறிமுகப்படுத்துவதே இந்நிலையின் குறிக்கோள் ஆகும்.

தொழில்நுட்ப உலகில் தங்களை வளர்த்துக் கொள்ளும் முகமாக மென்பொருள், வன்பொருள் மற்றும் இலத்திரனியல் மின்கூறுகள் மற்றும் சாதனங்களுக்கு மாணவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். இலத்திரனியல் சாதனங்களைக் கொண்டு பல புத்தாக்கங்களை மாணவர்கள் தாம் சுயமாக இந்த நிலையில் செய்யக் கூடியதாக இருந்தது. அவர்களுக்குத் தேவையான இலத்திரனியல் கூறுகள் நிலை மூன்றில் வழங்கப்பட்டது. மாணவர்கள் தமது வீடுகளிலேயே சிறு இலத்திரனியல்/ஆய்வு மேசைகளை அமைத்து நிஜ அனுபவங்களைப் பெறுவதற்கு சிறந்த ஒரு பயணமாக இப் புதிய பயணங்கள் அமைந்தது என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. அதுமட்டுமின்றி மாணவர்கள் ஆர்டினோ மேடைக்கும் அறிமுகப்படுத்தப்பட்டனர். மேலும் ஆர்டினோ ஊடாக Programming, Coding போன்றவற்றையும் அறிந்து கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் நிலை மூன்று செயற்றிட்டங்கள் மூலம் வழங்கப்பட்டது.

கணினி வசதி இல்லாத மாணவர்களுக்கு பாடசாலைகளில் உள்ள கணினிகளை பயன்படுத்தி செயற்றிட்டங்களை நிறைவு செய்ய பல பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் உதவி செய்தனர். நிலை மூன்றில் நாம் அவதானித்தவை யாதெனில் பெரும்பாலான மாணவர்களுக்கு Programming, Coding, மென்பொருள் பிரயோகம் புதிதாகவும் ஆரம்பத்தில் கடினமாகவும் இருந்தது. எனினும் தொடர் முயற்சி, சுய கற்றல், தேடி அறிந்து கொள்ளும் தன்மையினை அவர்களாகவே வளர்த்துக் கொண்டார்கள். செயற்றிட்டங்களின் கடினத்தன்மை மேலும் அவர்களின் ஆர்வத்தினை தூண்டி சுய கற்றலை விருத்தி செய்ததே தவிர அவர்களை சோர்வடையச் செய்யவில்லை.

 1. தானியங்கி சூரியோதய அலாரம் ஒன்றை உருவாக்குதல்
 2. தானியங்கி இரவு விளக்கு ஒன்றினைச் செய்தல்
 3. வெப்பமாறு மின்தடையைப் பயன்படுத்தி தானியங்கி மின்சுற்றைச் செய்தல்
 4. ரீட் ஆளியை (Reed Switch) பயன்படுத்தி மின்சுற்றினை அமைத்தல்
 5. LED ஒன்றை மிளிர வைத்தல்
 6. LED ன் ஒளிச்செறிவை படிப்படியாக குறைத்துக் கூட்டுதல்
 7. ஆர்டினோ மூலம் மோட்டார் ஒன்றை சுழல செய்தல்
 8. ஆர்டினோ மூலம் மோட்டார் ஒன்றின் சுழற்சி வேகத்தை கட்டுப்படுத்தல்
 9. ஆர்டினோவுடன் ஒளி உணர் தடையி ஒன்றை பயன்படுத்தல்
 10. LED ஒளிர் நிரல் வரிசை ஒன்றை உருவாக்குதல்

--

--

Yarl IT Hub is a not for profit social enterprise focused on fostering innovation, entrepreneurship and technology in Jaffna.

Get the Medium app

A button that says 'Download on the App Store', and if clicked it will lead you to the iOS App store
A button that says 'Get it on, Google Play', and if clicked it will lead you to the Google Play store
Yarl IT Hub

Yarl IT Hub is a not for profit social enterprise focused on fostering innovation, entrepreneurship and technology in Jaffna.