புதிய பயணங்கள்

Yarl IT Hub
3 min readJul 21, 2022

--

பாடசாலை மாணவர்களின் புத்தாக்க ஆற்றலை வெளிக்கொணர்வதற்கான களம் அமைத்த “புதிய பயணங்கள்” செயற்றிட்டம் பற்றிய ஓர் அறிமுகம்

கொரோனா தாக்கத்தினால் கடந்த இரண்டு வருடங்களாக மாணவர்களது கற்றல் செயற்பாடுகள் ஸ்தம்பித்து இருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது .மேலும் இதன் தாக்கம் ஒப்பீட்டளவில் கிராமப் புற பாடசாலை மாணவர்களது கல்வியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்ததோடு கற்றல் மீதான ஆர்வத்தை கணிசமான அளவு குறைத்திருந்தது.

தரம் ஆறு தொடக்கம் தரம் ஒன்பது வரையான மாணவர்களுக்கு சுவாரசியமான வகையில் அவர்களது சுயகற்றல் முறைமை மற்றும் தொழில்நுட்ப அறிவினை விருத்தி செய்ய ஒரு புதிய கற்றல் முறையை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியத்தை யாழ் ஐரி ஹப் உணர்ந்தது.பல கலந்துரையாடல்களுக்கு பின்னர் ஒரு யோசனையாக கிடைக்கப்பெற்ற “புதிய பயணங்கள் “ என்னும் இச் செயற்றிட்டம், இன்று மாணவர்களின் வாழ்க்கைப் பாதையில் ஒரு புதிய சுவாரசியம் மிக்க ஒரு ஆக்கபூர்வமான பயணமாக மாறியிருக்கிறது .

இப் புதிய பயணங்கள் எனும் செயற்றிட்டமானது, பாடசாலை மாணவர்களுக்குப் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன், புத்தாக்கத்திறன், விஞ்ஞான ஆய்வுத் திறன் போன்றவற்றை வளர்க்கும் முகமாகவும் அவர்களது திறன்களை வெளிக்கொணரவும் மற்றும் அவர்கள் தாமாக முன்வந்து சுய கற்றலில் ஈடுபடவும் ஒரு களமாக ஆரம்பிக்கப்பட்டது. STEM எனப்படும் விஞ்ஞானம், தொழில்நுட்பம் , பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் மாணவர்களின் திறன்களை சிறுவயது முதலே வளர்ப்பதன் மூலம் நிலைபெறு சமூகக் கட்டமைப்பை உருவாக்குவதே இச் செயற்றிட்டத்தின் தொலைநோக்கு ஆகும்.

கடந்த வருடம் (2021) டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட இம் முயற்சியானது, வடமாகாணத்தில் இருக்கும் சுமார் 80 இற்கும் மேற்பட்ட பாடசாலைகளில் வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் உதவியுடன் செயற்படுத்தப்பட்டு இவ்வருடம்(2022)ஜூன் மாதம் பரிசளிப்பு நிகழ்வுடன் முழுமையடைந்தது.

இச் செயற்திட்டத்துக்காக பாடசாலைகளை தெரிவு செய்யும் போது மாகாணத்தில் பிரபல பாடசாலைகள் அல்லாத அங்கீகாரம் தேவைப்படும் மாணவர்களை உள்ளடக்கிய பாடசாலைகளே தெரிவுசெய்யப்பட்டன.

இப்பயணமானது மூன்று நிலைகளை உள்ளடக்கி இருந்தது.மாணவர்களின் ஆர்வத்தினை அதிகரிக்கவும் ,அவர்களைத் தொடர்ந்து ஊக்குவிக்கவும் இப் பயணமானது ஒரு விளையாட்டை ஒத்த ஒரு கட்டமைப்பில் உருவாக்கப்பட்டது.ஒவ்வொரு நிலை முடிவிலும் அடுத்த நிலைக்கான வழிகாட்டுதல் புத்தகமும் பரிசில் பொதிகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

வட மாகாணத்திலுள்ள 11 கல்வி வலயங்களில் அங்கீகாரம் தேவைப்படும் பாடசாலைகளில் தரம் ஆறு தொடக்கம் தரம் ஒன்பது வரையான சுமார் 9,636 மாணவர்களிற்கு முதலாவது புத்தகம் (நிலை-1) வழங்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. 1,267 மாணவர்கள் நிலை-1 ஒன்றைப் பூர்த்தி செய்து நிலை-2 இற்குத் தெரிவானதுடன், 330 மாணவர்கள் நிலை-3 இற்குத் தெரிவாகினர். இவர்களில் நிலை-3 இனை மிகச்சிறப்பாக நிறைவு செய்த முதல் 50 மாணவர்கள் Electronic Tablet பெற்றுக்கொண்டனர் .

ஒவ்வொரு நிலைக்கும் வழங்கப்பட்ட வழிகாட்டல் புத்தகங்களில் விஞ்ஞான ஆய்வுச்செயன்முறை, புத்தாக்கம் சம்பந்தமான செயற்பாடுகள் காணப்பட்டன.ஒவ்வொரு நிலைப் புத்தகங்களிலும் உள்ள செயற்பாடுகளைச் செய்து எங்களுடன் பகிர்ந்த பின்னர் எங்களால் பின்னூட்டல் வழங்கப்பட்டு அனைத்து செயற்பாடுகளையும் நிறைவு செய்த மாணவர்கள் அடுத்த நிலைக்குச் செல்லக் கூடியதாக இருந்தது.

STEM துறைகள் சார்ந்த புத்தகங்கள் தமிழில் மாணவர்களுக்காக வெளியிடப்படுவது மிகக் குறைவு. இம்மூன்று புத்தகங்களும், STEM துறைகள் சார்ந்து பாடசாலை மாணவர்களுக்கு பல சுவாரசியமான செயற்பாடுகள் மற்றும் பரிசோதனைகளை உள்ளடக்கியதாக தமிழில் வெளிவந்த புத்தகங்கள் என்பது இச் செயற்றிட்டத்தின் மேலும் ஒரு சிறப்பம்சம் ஆகும்.

மூன்றுநிலைகளையும் சுயமாகச் முயற்சித் செய்து நிறைவு செய்ததன் ஊடாக மாணவர்கள் தமக்குள் இருக்கின்ற கண்டுபிடிப்பாளர்களை வெளிக்கொணரவும், அவர்களின் எதிர்கால இலக்குகளைக் கண்டறியவும் உதவியாக இருக்கும். இதனை விட மாணவர்கள் இனி வரும் காலங்களில் தன்னிச்சையாக செயற்படவும் இப்பயணம் துணைபுரியும். மாணவர்களின் சுய சிந்தனைகளை, ஆற்றல்களை வளர்ப்பதன் ஊடாக சமூகத்தில் ஒரு நிறைவான கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியினை நாம் அடைய முடியும் என திடமாக நம்புகின்றோம்.

--

--

Yarl IT Hub

Yarl IT Hub is a not for profit social enterprise focused on fostering innovation, entrepreneurship and technology in Jaffna.