பொதுமுடக்கத்தின் மத்தியிலும் நடைபெற்ற Yarl Geek Challenge Junior போட்டி
வடமாகாண மாணவர்களுக்காக நடாத்தப்படும் Yarl Geek Challenge Junior போட்டி வெகுசிறப்பாக இம்முறையும் நடைபெற்று முடிந்திருக்கின்றது. யாழ்ப்பாணத்திலிருந்து செயற்பட்டுவரும் Yarl IT Hub அமைப்பினால், மாணவர்களுக்காக நடாத்தப்படும் இந்த வருடாந்தப் போட்டி, ஒன்பதாவது தடவையாகவும் இடம்பெற்றுள்ளது.
உலகளாவிய ரீதியில் பாரிய முடக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் பெருந்தொற்றுச் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, இவ்வாண்டுக்கான Yarl Geek Challenge Junior போட்டி இணையவழியில் நடத்தப்பட்டது. கடந்த மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட இப்போட்டி ஐந்து பிரிவுகளைக் கொண்டிருந்தது. இணையத்தளம்/இணையதள செயலி(Web application), திறன்பேசிக்கான செயலி(Mobile application), வன்பொருட் செயலி (Hardware application), விஞ்ஞான பிரயோகம்(Application of Science), ஏனைய புத்தாக்கங்கள்(Other Innovations) ஆகிய அந்த ஐந்து பிரிவுகளில் விண்ணப்பிக்குமாறு வடமாகாண மாணவர்கள் கோரப்பட்டிருந்தனர்.
ஊரடங்கு மற்றும் பொதுமுடக்கம் நிலவிய அசாதாரண சூழ்நிலையிலுங்கூட, மாணவர்களிடமிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டமையானது, Yarl Geek Challenge Junior போட்டி தொடர்பில், அவர்கள் மத்தியில் உள்ள ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றது. இந்தப் போட்டி தொடர்பில் மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்காக இணையவழிக் கருத்தரங்கு ஒன்றையும் Yarl IT Hub அமைப்பு முன்னெடுத்திருந்தது. இதனையடுத்து தங்களது எண்ணக்கருக்களை 14.05.2020 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு மாணவர்கள் கோரப்பட்டனர்.
இதனையடுத்து 17.05.2020 ஆம் திகதியன்று போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கான குழு நெறிப்படுத்தல் நிகழ்வு நடத்தப்பட்டதுடன், வழிகாட்டல் கருத்தரங்கொன்றும் இணையம் மூலமாக 31.05.2020 ஆம் திகதியன்று இடம்பெற்றது. இதன்மூலம் மாணவர்கள் தங்களது எண்ணக்கருக்களை மேம்படுத்துவதற்கு வழிகாட்டப்பட்டது. மேலும் இதனைத் தொடர்ந்து, தெரிவு செய்யப்பட்ட அணிகளுக்கு தனிப்பட்ட நெறிப்படுத்தல் வழங்கபட்டதுடன், தங்கள் எண்ணக்கருக்களின் இறுதி வடிவங்களைச் சமர்ப்பிக்கும்படி மாணவர்கள் கோரப்பட்டனர்.
இதிலிருந்து, இறுதிச்சுற்றுக்கு 30 அணிகள் தெரிவு செய்யப்பட்டன. இதற்கான நிகழ்வு கடந்த ஜூன் மாதம் 13 ஆம் திகதி இணையவழியூடாக நடத்தப்பட்டது.
இறுதிச்சுற்றுக்கான நடுவர்களாகப் பேராசிரியர் ரொஷான் ராகெல், கலாநிதி முருகதாஸ் தணிகைச்செல்வன், திரு. சோமாஸ்கந்தன் சுதாகர், திரு. சிவபாதசுந்தரம் தர்மசீலன், திரு. அருள்சோதி துஷ்யந்தன், திரு. பாஸ்கரசுந்தரம் விமலாகரன் ஆகியோருடன் பேராசிரியர். பி. ரவிராஜனும் பணியாற்றினார்.
நடுவர்களின் தீர்மானத்தின்படி, சிறந்த எண்ணக்கருக்களையும் அதை முழுமையாக செயற்படுத்திய சிறந்த முடிவான தயாரிப்பையும் கொண்ட அணிகள் Yarl Geek Challenge Junior போட்டியில் வெற்றி பெற்றவையாக அறிவிக்கப்பட்டன. இணையத்தள / இணையவழிச் செயலி(Web application)க்கான பிரிவில், யாழ்ப்பாணக் கல்லூரி மாணவர்களான யாதவன் சேயவன், செல்வகுமார் கோகுலபிரியன், பரமலிங்கம் சத்யாகரன் ஆகியோரைக் கொண்ட அணி வெற்றி பெற்றது. திறன்பேசி செயலிக்கான(Mobile application) பிரிவில், யாழ்ப்பாணக் கல்லூரி மாணவர்களான பரமேஸ்வரன் பிரவீனன், பாபு பிருந்தன், தயானந்தன் சுமன் ஆகியோரைக் கொண்ட அணி வெற்றி பெற்றது.
வன்பொருட் செயலிக்கான(Hardware application) பிரிவில், யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவர்களான எம்.ப்ரதாபன், ரகுமார் தருண் ஆகியோரைக் கொண்ட அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. விஞ்ஞான பிரயோகத்திற்கான(Application of Science) பிரிவில், கிளிநொச்சி இராமநாதபுரம் கிழக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த ஜோககிரிநாதன் சங்கீதன் வெற்றிக்கனியைத் தட்டிப்பறித்தார். ஏனைய புத்தாக்கங்களுக்கான(Other Innovations) பிரிவில், யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவரான எஸ். விந்துஜன் வெற்றிகொண்டார்.
இந்த ஆண்டுக்கான போட்டியில் ஏராளமான சிறந்த எண்ணக்கருக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், நடுவர்கள் சில எண்ணக்கருக்களுக்கு விசேட விருது வழங்கப்பட வேண்டுமெனத் தீர்மானித்திருந்தனர். அந்த வகையில், நான்கு எண்ணக்கருக்கள் அந்த விருதுக்குரியவையாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த விசேட விருதுக்கு, யாழ்ப்பாணம் ஹாட்லிக் கல்லூரி மாணவரான ரமேஷ்குமார் ரஜிந்தன், புனித பத்திரிசியார் கல்லூரி மாணவரான பி. அஜீவன், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்களான ரகுமார் தருண் மற்றும் எம். பிரதாபன் ஆகியோருடன், ஹாட்லி கல்லூரி மாணவரான ஸ்ரீதரன் புஷ்பாகரும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நடுவராகப் பணியாற்றியிருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பௌதிகவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி முருகதாஸ் தணிகைச்செல்வன், Yarl Geek Challenge Junior போட்டியில், வடமாகாண மாணவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடனும் கடின உழைப்புடனும் பங்கேற்றிருந்ததாகக் குறிப்பிட்டார். பிரச்சினையொன்றுக்குத் தீர்வினைக் கண்டுபிடிக்க வேண்டுமெனின், அந்தப் பிரச்சினைக்கு வெளியே நின்று சிந்திக்க வேண்டும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இத்தகைய சிந்தனைக்கான தகுதி பாடசாலை மாணவர்களுக்கு உள்ளதென கலாநிதி முருகதாஸ் தணிகைச்செல்வன் தனது கருத்துரையின் போது, தெரிவித்தார்.
மற்றொரு நடுவரும் வட மாகாணக் கல்வித்திணைக்களத்தின் உதவிக் கல்விப்பணிப்பாளருமான திரு. சிவபாதசுந்தரம் தர்மசீலன், இந்தப் போட்டி நிகழ்வில், மாணவர்கள் செய்த பல படைப்புகள் அன்றாட வாழ்வில் மக்கள் பயன்படத் தக்கவையாகவும், மிகவும் சிறப்பான முறையில் மாணவர்களால் முன்வைக்கப்பட்டதாகவும் கூறினார். கோவிட்19 நோய் பெருந்தொற்றாகப் பரவி எல்லோரும் வீட்டுக்குள் முடங்கியிருந்த காலத்திலும் மாணவர்கள் விடாமுயற்சியுடன் தமது படைப்புகளைச் செய்து சமர்ப்பித்ததாக அவர் தெரிவித்தார். பங்கேற்க தவறிய மாணவர்கள் அருமையான வாய்ப்பொன்றை தவறவிட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டார். மேலும் Yarl IT Hub அமைப்பினால் நடத்தப்பட்ட Yarl Geek Challenge Junior போட்டிக்கு, வட மாகாணக் கல்வித்திணைக்களம் ஒத்துழைப்பு வழங்கியதையும் திரு. சிவபாதசுந்தரம் தர்மசீலன் தமது உரையில் குறிப்பிட்டார்.
தரம் ஏழில் இருந்து உயர்தரம் வரையாக, பல தரங்களைச் சேர்ந்த மாணவர்களும் Yarl Geek Challenge Junior போட்டியில், பங்குபற்றியமை மிகுந்த மகிழ்ச்சிக்குரியதென, இப்போட்டியின் நடுவர்களில் ஒருவரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கணினி விஞ்ஞானப் பிரிவு சிரேஷ்ட விரிவுரையாளருமான திரு. சோமாஸ்கந்தன் சுதாகர் கருத்துரைத்தார். இப்போட்டியில் மாணவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட எண்ணக்கருக்களின் தரம் குறித்தும் அவர் பாராட்டினார். விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்துறையில் மாணவர்கள் தங்கள் இயலுமையையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தியுள்ளதாக, திரு. சோமாஸ்கந்தன் சுதாகர் தமது உரையில் சுட்டிக்காட்டினார்.
Yarl IT Hub அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு செயற்றிட்டங்களில், Yarl Geek Challenge Junior போட்டி மிக முக்கியமானது. வடக்கில் உள்ள மாணவர்கள் மத்தியில் ‘புத்தாக்கத்திறனை’ வளர்த்தெடுக்க வேண்டிய அவசியத்தை நன்கு புரிந்து கொண்ட Yarl IT Hub அமைப்பு, அதற்காகவே இந்தப் போட்டியை முன்னெடுத்து வருகின்றது.