மிகப் பிரம்மாண்டமாய் நடைபெற்று முடிந்த Yarl Geek challenge ஜூனியரின் பதினோராவது பருவகாலம்

Yarl IT Hub
5 min readJul 26, 2022

--

Yarl Geek challenge ஜூனியர் என்பது பாடசாலை மாணவர்களின் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திறனை வளர்க்கும் முகமாக Yarl IT Hub வட மாகாண கல்வித் திணைக்களத்துடன் இணைந்து நடாத்திவரும் புத்தாக்க போட்டி ஆகும். இம்முறையும் தொடர்ந்து பதினோராவது தடவையாக நடாத்தி முடிக்கப்பட்டது. பெருந்தொற்று காரணமாக கடந்த இரு வருடங்களும் நிகழ்நிலையில் நடாத்தப்பட்ட போட்டிகள் இம்முறை நேரடியாக மிகப் பிரம்மாண்டமாய் நடைபெற்று முடிந்துள்ளது.

ஆரம்பம்: அறிமுகமும் பயிற்சிப்பட்டறைகளும்

YGC ஜூனியர் — சீசன் 11 அதிகாரப்பூர்வமான அறிவிப்புடன் மார்ச் 11 ஆம் திகதி தொடங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாணவர்களுக்கு போட்டி தொடர்பான அறிமுகத்தையும், அறிவுறுத்தல்களையும் வழங்குவதற்காகவும் மாணவர்களை போட்டிக்கு தயார்ப்படுத்தும் நோக்கிலும் ஒவ்வொரு வலயங்களிலும் பயிற்சிப்பட்டறைகள் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தன. இப்பயிற்சிப்பட்டறைகள் கிளிநொச்சி வடக்கு, கிளிநொச்சி தெற்கு, வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு, முல்லைத்தீவு, தென்மராட்சி, யாழ்ப்பாணம், வடமராட்சி மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் நடாத்தப்பட்டது. இதில் 900 இற்கும் அதிகமான மாணவர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர். இதில் மாணவர்களுக்கு Web application, Mobile application, மற்றும் Hardware application ஒன்றை எவ்வாறு உருவாக்குவது பற்றியும் அவற்றிற்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டன. அத்துடன் புத்தாக்க சிந்தனை தொடர்பான விழிப்புணர்வு அமர்வுகளும் இடப்பெற்றன.

தொடர்ச்சியாக மாணவர்களிடம் இருந்து , 2022 மே 29ஆம் திகதி வரை YGC ஜூனியர் 11 போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இறுதியில் வடமாகாணம் முழுவதிலுமிருந்து 260 இற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர்ந்தன. விண்ணப்பித்த மற்றும் பங்குபற்ற விரும்பும் அணிகளில் வழிகாட்டுதல் தேவைப்படும் அணிகளுக்கு வழிகாட்டுதல் அமர்வுகளும் இடம்பெற்றன.

வலய மட்ட மதிப்பீடு

வலயமட்ட போட்டியானது வடமாகாணத்தில் ஆறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வலய மட்ட மதிப்பீடுகள், 2022 ஜூன் 11 சனிக்கிழமையன்று நடைபெற்றது. நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையால் பல சவால்களுக்கு மாணவர்கள் முகங்கொடுத்தாலும் அச் சவால்களை எல்லாம் தகர்த்தெறிந்து மாணவர்கள் தத்தமது படைப்புக்களை மிகச்சிறப்பாக காட்சிப்படுத்தினர். வலயமட்டத்திலிருந்து 63 அணிகள் இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தன.

வழிகாட்டுதல்கள் மற்றும் இறுதிப் போட்டி

வலய மட்ட போட்டியை தொடர்ந்து, YGC ஜூனியர் இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய அணிகளுக்கு பிரத்தியேகமாக தனித்தனியே மெய்நிகர் வழிகாட்டுதல்கள் ஜூன் 22, 23, மற்றும் 24 ஆம் திகதிகளில் இடம்பெற்றன. இறுதிப் போட்டி ஜூன் 25 ஆம் 26 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. போட்டியின் முதலாம் நாள், ஜூன் 25 ஆம் திகதி ஸ்டான்லி வீதியிலுள்ள ஹட்ச் களத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. காலை 8.30 மணி தொடக்கம் மாணவர்கள் வருகை தர தொடங்கியிருந்தார்கள். தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்விபயிலும் Yarl IT Hub இன் தன்னார்வலர்களால் இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய அணிகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. பின்னர் ஒவ்வொரு அணிகளுக்கும் அளிக்கை செய்வது தொடர்பான பயிற்சியும் பின்னூட்டல்களும் வழங்கப்பட்டன. மாணவர்கள் அடுத்த நாள் நடைபெறவிருக்கும் இறுதிப்போட்டிக்கு தங்களை தயார்ப்படுத்திக்கொண்டு தன்னம்பிக்கையோடு விடைபெற்றனர்.

இறுதி மதிப்பீடு ஜூன் 26 காலை 8.30 மணி முதல் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது. இம்முறை மதிப்பீடுகள் ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியே நடாத்தப்பட்டது. மதிப்பீட்டிற்கான குழுக்களானது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறந்த மதிப்பீட்டாளர்களை கொண்டிருந்தது. இறுதிப் போட்டிக்கு மதிப்பீட்டாளர்களாக யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்கள் Dr. E.Y.A. Charles, Prof. T.Thiruvaran, Prof. K.Gajapathy, Dr. K.Thabotharan, Dr. A.Ramanan, Dr. A.Kaneswaran, Dr. (Mrs).Barathy Mayurathan, Mr. S.Suthakar, Dr. T.Kokul, Dr. (Mrs.)Pratheeba Jeyananthan, Dr. (Mrs.)J.Jananie, Dr. P.Iyngaran ஆகியோருடன் பிரதிக் கல்விப் பணிப்பாளர்(விஞ்ஞானம்) Ms. A.Nirubarani மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் நடாத்தும் அல்லது பணிபுரியும் R.Jayakrishnan, Jestan Nirojan, S.Prashanth, R.Jarachanthan, K.Ravichelvan ஆகியோரும் செயற்பட்டனர். Web, Mobile, ஆகிய பிரிவுகளுக்கு யாழ்ப்பாணத்திலுள்ள ஹட்டன் நேஷனல் வங்கி கிறீன் பில்டிங்கின் 3ஆம் மாடியிலும் Hardware, Innovation, and Application of Science ஆகிய பிரிவுகளுக்கு யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியிலுள்ள ஹட்ச் களத்திலும் மதிப்பீடுகள் நடாத்தப்பட்டது. ஒவ்வொரு பிரிவிற்கும் ஒவ்வொரு வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன், சிறந்த படைப்பொன்றிற்கு சிறப்பு விருது வழங்க நடுவர்களால் பரிந்துரைக்கப்பட்டது.

“புதிய பயணங்கள்” செயற்றிட்டம்

புதிய பயணங்கள் எனும் செயற்றிட்டமானது பாடசாலை மாணவர்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன், புத்தாக்கத்திறன், விஞ்ஞான ஆய்வுத் திறன் போன்றவற்றை வளர்க்கும் முகமாகவும் அவர்களது திறன்களை வெளிக்கொணரவும் மாணவர்களை தாமாக முன்வந்து சுயகற்றலில் ஈடுபடவைக்கவும் ஒரு களமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. STEM எனப்படும் விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் மாணவர்களின் திறன்களை சிறுவயது முதலே வளர்த்து நிலைபேறான ஒரு சமூகக் கட்டமைப்பை உருவாக்குவதே இச் செயற்றிட்டத்தின் தொலைநோக்கு ஆகும். இச் செயற்றிட்டம் மூன்று நிலைகளை உள்ளடக்கியது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட இம்முயற்சியானது, வடமாகாணத்தில் இருக்கும் 11 கல்வி வலயங்களில் அங்கீகாரம் தேவைப்படும் 80 இற்கும் மேற்பட்ட பாடசாலைகளில் சுமார் 9,636 மாணவர்களிற்கு முதலாவது புத்தகம் (நிலை-1) வழங்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. 1,267 மாணவர்கள் நிலை-1 ஒன்றைப் பூர்த்தி செய்து நிலை-2 இற்குத் தெரிவானதுடன், 330 மாணவர்கள் நிலை-3 இற்குத் தெரிவாகினர். இவர்களில் 60 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் நிலை-3 இனை நிறைவு செய்துள்ளனர்.

விருது வழங்கும் நிகழ்வு

Yarl Geek challenge ஜூனியர் — சீசன் 11 இல் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வுடன் “புதிய பயணங்கள்” செயற்றிட்டத்தில் சிறப்பாக செயற்பட்ட மாணவர்களுக்கு பரிசில் வழங்கும் நிகழ்வும் காலை 11.00 மணிக்கு கிறீன் பில்டிங் ஹட்டன், நேஷனல் வங்கி கேட்போர் கூடத்தில் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது. இந் நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.சிறிசற்குணராஜா (Prof.S.Srisatkunarajah) மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் வடமாகாணம் திரு.செ.உதயகுமார், மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் வடமாகாணம்(கல்வி அபிவிருத்தி) திரு.ரி.ஜோன் குயின்ரஸ், யாழ் பல்கலைக் கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஆர். சுரேந்திரகுமரன் (Prof.R.Surenthirakumaran) யாழ் பல்கலைக்கழக கணினித் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.மகேசன் ஆகியோர் வருகை தந்திருந்தனர். அத்துடன் ஜூனியரின் இறுதிப் போட்டி மதிப்பீட்டாளர்கள், அதிபர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வை காண அரங்கமே நிறைந்திருந்தது.

நிகழ்வின் ஆரம்பத்தில் Yarl IT Hub இன் செயற்றிட்டங்கள் மற்றும் தற்போதய செயற்பாடுகள் தொடர்பாக அளிக்கை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து YGC ஜூனியரின் வலயமட்ட வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். “புதிய பயணங்கள்” செயற்றிட்டத்தில் சிறப்பாக செயற்பட்ட முதல் 50 மாணவர்களுக்கு Tablet (வரைப்பட்டிகை) வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.அதனைத் தொடர்ந்து சிறப்பு அதிதி திரு.செ.உதயகுமார் அவர்களின் உரை இடம்பெற்றது. YGC ஜூனியரின் பதினோராவது பருவகால வெற்றியாளர்கள் யார் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்க ஒவ்வொரு பிரிவிற்குமான வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். வெற்றியாளர்களை பிரதம அதிதி பேராசிரியர் எஸ்.சிறிசற்குணராஜா, சிறப்பு அதிதிகள் திரு.செ.உதயகுமார், கலாநிதி எஸ்.மகேசன் ஆகியோருடன் அந்தந்த பிரிவுகளுக்குரிய நடுவர்களும் சேர்ந்து சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் கேடயம் வழங்கி கௌரவித்தனர்.அதனை தொடர்ந்து நடுவார்களால் பரிந்துரைக்கப்பட்ட சிறந்த படைப்பொன்றிற்கு சிறப்பு விருது வழங்கபட்டது. சிறப்பு அதிதி பேராசிரியர் எஸ்.சிறிசற்குணராஜா அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது. அவர் வெற்றி பெற்ற மற்றும் கலந்துகொண்ட மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதோடு நிகழ்வு தொடர்பாக தனது மகிழ்வினையும் தெரிவித்தார். இறுதியாக நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

போக்குவரத்து, பொருட் தட்டுப்பாடு என பல சவால்களுக்கு முகம் கொடுத்திருந்தாலும், ஒவ்வொரு மாணவரும் தங்களுடைய புத்தாக்கங்களையும் தங்களுடைய அறிவினையும் தேடலின் மூலமும் மிகச் சிறந்த முறையில் வடிவமைத்து இறுதிப் போட்டியில் போட்டியிட்டிருந்தனர். அவர்களது சவால்களை முகம் கொடுக்கும் மனத்துணிவு பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். மேலும் இப்போட்டியில் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்திய அனைத்து மாணவர்களுமே ஒருவகையில் வெற்றியாளர்கள் தான்.

வெற்றியாளர்கள்

Best Mobile Application Elilkumaran Suthakaran of J/Hartley College

Best Application of Science Ladchumanan Thamilinpan மற்றும் Ladchumanan khovarnan of Kn/kilinochchi Maha Vidyalayam

Best Innovation Balamurali Thanosh மற்றும் Babu Kaviyan of J/Jaffna College

Best Hardware application Vijenthiran Arthikan of J/Hartley College

Best Web Application Thasajayani Jatheerthanan of J/Vembadi Girls’ High School

சிறப்பு விருது பெற்ற மாணவன் N.Piranavan of Mu/ Pandian Kulam Maha Vidyalayam

இம் மாணவர்கள் அனைவரும் தமது மாதிரிகளை மேலும் பல தொழில்நுட்ப முறைகளை கையாண்டு போட்டிகளை முடித்திருந்தாலும் தமது ஊக்கத்தின் மூலம் சிறப்பாக வடிவமைத்து தொழில்நுட்ப வல்லுனர்களாக வளருவார்கள் என்று நாம் திடமாக நம்புகிறோம். ஒவ்வொரு மாணவர்களினதும் முயற்சியின் வெளிப்பாட்டினுடாக போட்டியில் வெற்றி பெற்ற மற்றும் பங்கு பற்றிய மாணவர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்!

--

--

Yarl IT Hub
Yarl IT Hub

Written by Yarl IT Hub

Yarl IT Hub is a not for profit social enterprise focused on fostering innovation, entrepreneurship and technology in Jaffna.

No responses yet