வடக்கில் வளர்கின்ற தகவல் தொழில்நுட்பம்:
ஒன்பதாவது Yarl Geek Challenge Junior போட்டி
யாழ்ப்பாணத்திலிருந்து செயற்பட்டுவரும் எமது Yarl IT Hub அமைப்பினால், வட மாகாண மாணவர்களுக்காக நடாத்தப்படும் Yarl Geek Challenge Junior என்ற வருடாந்தப் போட்டி நிகழ்வு 9ஆவது தடவையாக இந்த ஆண்டும் நடைபெறவிருக்கின்றது.
Yarl IT Hub இனால் செயற்படுத்தப்பட்டுவரும் பல்வேறு செயற்றிட்டங்களில், Yarl Geek Challenge Junior மிக முக்கியமானது. வடக்கில் உள்ள மாணவர்கள் மத்தியில் ‘புத்தாக்கத்திறனை’ வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியத்தை நன்கு புரிந்து கொண்ட எமது Yarl IT Hub அமைப்பு, அதற்காகவே இந்தப் போட்டியை மிகச் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றது. வடமாகாணக் கல்வித்திணைக்களத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படுவதன் காரணமாக, Yarl Geek Challenge Junior போட்டி, அங்கீகாரம் கொண்டதாக உருவெடுத்திருக்கின்றது.
Web application, Mobile application, Hardware application, Application of Science, Other Innovations ஆகிய ஐந்து பிரிவுகளில் இடம்பெறவுள்ள இந்தப் போட்டியில், 19வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் தனியாகவோ அல்லது குழுக்களாகவோ பங்கேற்கலாம். அணியாக இணைந்து செயற்படுவதன் அவசியத்தை புரியவைப்பதற்காகவும், அதிக மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்பதாலும், குழுக்களாகப் பங்குபற்றுவதையே Yarl IT Hub அமைப்பு ஊக்குவிக்கின்றது.
Web Application Development போட்டிப் பிரிவு, மாணவர்களால் இனம் காணப்படும் பிரச்சினைக்குரிய தீர்வொன்றை, இணையத்தள உருவாக்கத்தின் ஊடாக எதிர்பார்க்கின்றது. Mobile Application Development பிரிவில், பிரச்சினைக்குரிய தீர்வினை, கையடக்கத் தொலைபேசியில், இயங்கக்கூடிய செயலியாக முன்வைக்கலாம்.
அதைப்போலவே, Hardware Application Development போட்டிப் பிரிவில், குறித்த தீர்வினை வன்பொருட்கள் மற்றும் உணரிகளின் (Arduino / Raspberry pi + sensors) உதவியுடன் வெளிப்படுத்தலாம். மாணவர்கள் தாங்கள் அன்றாடம் காணும் ஒரு பொறிமுறையை அல்லது விஞ்ஞானம்/ தொழில்நுட்பப் பாடங்களில் இருக்கும் ஒரு பரிசோதனையை, அதற்குரிய விஞ்ஞான விளக்கத்துடன், காணொளியாகச் சமர்ப்பிப்பதை, Application of Science என்ற போட்டிப்பிரிவு தனது வரையறையாகக் கொண்டுள்ளது.
அதேவேளை, மேற்குறிப்பிட்ட போட்டிப் பிரிவுகளின் வரையறைகளுக்குள் அடங்காத, புத்தாக்கத் தயாரிப்புகளுக்கும் நாம் இடமளிக்கின்றோம். Innovative product development என்ற புதிய போட்டிப்பிரிவின் கீழ் அந்தப் புத்தாக்க எண்ணக்கருக்கள் வரவேற்கப்படுகின்றன. கணினித் தொழில்நுட்பம் பயன்படுத்தாத எண்ணக்கருக்களையும் இப்பிரிவில் அடக்கலாம்.
பிரிச்சினை ஒன்றை இணங்கானும் போது சாதராரண சூழலில் அன்றாடம் முகங்கொடுக்கும் ஒரு பிரச்சினையையோ அல்லது பெருந்தொற்று ஒன்று உலகம் முழுவதும் பரவி, அனைவரும் வீட்டுக்குள் முடங்கி இருக்கவேண்டிய சமகாலச் சூழலில் உள்ள பிரச்சினையோ, அல்லது இந்த வைரஸ் தாக்கத்தின் பின்னரான புதிய இயல்பு நிலையின் போது எதிர்காலத்தில் வரக்கூடிய பிரச்சினை ஒன்றையோ, மாணவர்கள் இதற்காகத் தேர்ந்தெடுக்கமுடியும்.
விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணக்கருக்களும் தீர்வுகளும் இருகட்டங்களாக மதிப்பீடு செய்யப்படுகின்றன. ஆரம்பகட்ட மதிப்பீட்டில், தேர்வான குழுக்கள் அல்லது தனிநபர்களுக்கு சிறப்பான வழிகாட்டல் வழங்கப்படுகின்றது. இதன் மூலம் மாணவர்களுக்கு, அவர்களுடைய பாடவிதானச் சூழலில் கிடைக்காத, புதிய உலகின் வாயிற் கதவுகள் திறக்கப்படுகின்றன. தங்கள் எண்ணக்கருக்களை வளர்த்தெடுப்பது எப்படியென்றும், அதனை எவ்வாறு சமர்ப்பிப்பது என்றும் அவர்கள் பயிற்றுவிக்கப்படுகின்றார்கள்.
இறுதிக்கட்ட மதிப்பீடு நடைபெறும் நாள் நெருங்க நெருங்க, போட்டியாளர்களின் இதயத்துடிப்பு அதிகரிக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. மிக விறுவிறுப்பாக நடைபெறும் அந்தப் போட்டியில், அவர்களது அறிவு பட்டை தீட்டப்படுகின்றது. Yarl Geek Challenge Junior போட்டிச்சூழல், அவர்களின் கற்றல் திறனை மேலும் வளர்க்கின்றது. இறுதிக்கட்ட மதிப்பீட்டு நாட்களில் அவர்கள் தாங்கள் வளர்த்தெடுத்த எண்ணக்கருவினை, சரியாகச் சமர்ப்பித்தாக வேண்டும்.
இறுதிக்கட்ட மதிப்பீடு வெற்றியாளர்களைத் தீர்மானிப்பதோடு, புத்தாக்க முனைப்புக் கொண்ட இளம் சமுதாயத்தை உலகுக்கு அளிக்கின்றது. போட்டிக்குச் சமர்ப்பிக்கப்படும் எண்ணக்கருக்கள், “புதுமை (Innovation), பயன்பாட்டுத்திறன் (Usability), அவசியமான அம்சங்களின் முழுமைத்தன்மை (Completeness), அசல் தன்மை (Originality) ஆகியவற்றுடன் தொழில்நுட்ப ரீதியான ஸ்திரத்தன்மை (Technical Stability)” என்னும் அளவுகோல்களைக் கொண்டு மதிப்பிடப்படுகின்றது.
எமது அமைப்பினால், நடாத்தப்படுகின்ற Yarl Geek Challenge Junior என்ற இந்தப் போட்டியினால் பயன்பெற்ற பல மாணவர்கள், தகவல் தொழில்நுட்பத்துறையில், இது தங்களுக்கு முக்கியமானதோர் ஊக்கியாக இருந்ததாகச் சொல்கின்றார்கள். வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், மாணவர்கள் இந்தப் போட்டியில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸினால் உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை, இலங்கையையும் தாக்கியுள்ள இன்றைய சூழலில், இந்தப் போட்டியை, நாம் முழுமையாக இணையவழியில் நடாத்தத் தீர்மானித்துள்ளோம். எட்டு ஆண்டுகளைக் கடந்து ஒன்பதாவது ஆண்டாக நடைபெறவுள்ள இந்தப் போட்டி குறித்த மேலதிக விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தைப் பெறவும், www.yarlithub.org/ygc என்ற இணையத்தள முகவரியைப் பயன்படுத்த முடியும்.
வைரஸ் தொற்றினைக் கட்டுப்படுத்துவதற்காக, தற்போது வீடுகளுக்குள் அனைவரும் முடங்கியிருக்கின்ற இந்தச் சூழலில், மாணவர்களின் புத்தாக்கத்திறனை வெளிக்கொண்டு வந்து, வளர்க்கின்ற புதிய சவாலை, நாங்கள் இந்த முறை எதிர்கொள்கின்றமை சுட்டிக்காட்டத் தக்கது.