Yarl Geek Challenge போட்டியின் 11 ஆவது பருவகாலம் ஆரம்பமாகி உள்ளது
மாணவர்களின் புத்தாக்க திறன்களை வெளிக்கொணர்வதற்காகவும் மற்றும் வெளிக்காட்டுவதற்காகவும் நடாத்தப்படும் Yarl Geek Challenge போட்டியின் 11 ஆவது பருவகாலம் தற்போது ஆரம்பமாகி உள்ளது. இதன் முதற்கட்டமாக போட்டிக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்தும் நோக்கில் பாடசாலை மாணவர்களிற்குப் பயிற்சிப் பட்டறைகள் நடாத்தப்பட்டு வருகிறது. கடந்த 12 ஆம் 13 ஆம் திகதி கிளிநொச்சி வடக்கு வலய மற்றும் வவுனியா வடக்கு வலயங்களில் பயிற்சி பட்டறை நடாத்தப்பட்டது. இதில் கிளிநொச்சி வடக்கு வலயத்திலிருந்து 90 இற்கும் மேற்பட்ட மாணவர்களும் வவுனியா வடக்கு வலயத்திலிருந்து 160 இற்கும் மேற்பட்ட மாணவர்களும் பங்குபற்றியிருந்தனர்.
Yarl Geek Challenge Junior என்பது வடமாகாணத்திலுள்ள மாணவர்களினுடைய புதிய புத்தாக்கத் திறனை ஊக்குவிப்பதற்காகவும் அவர்கள் கணினியின் மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குரிய திறனை வளர்ப்பதற்காகவும் Yarl IT Hub வடமாகாணக் கல்வித் திணைக்களத்துடன் இணைந்து வடமாகாணம் முழுவதிற்குமாக நடாத்தப்படும் ஒரு போட்டியாகும். இதன் மூலம் மாணவர்கள் தொழில்நுட்ப அறிவினை விருத்திசெய்து கொள்ள முடிவதுடன் சுயமாக செயற்படும் தன்மையும் வெளிக்கொணரப்படுகிறது. அந்த வகையில் இவ்வருடம் இப்போட்டியின் பதினோராவது பருவகாலமானது ஆரம்பமாகி உள்ளது. அதற்கமைய இப்போட்டியின் முதலாவது அங்கமாக வடமாகாணத்திலுள்ள அனைத்து வலய பாடசாலைகள் தோறும் சென்று மாணவர்களிற்கு இப்போட்டி தொடர்பான அறிவுறுத்தல்களையும் பயிற்சிகளையும் வழங்குவதற்காகப் பயிற்சிப்பட்டறைகள் நடாத்தப்பட்டு வருகிறது.
இதனடிப்படையில் கடந்த 12 ஆம் 13 ஆம் திகதிகளில் வவுனியா வடக்கு மற்றும் கிளிநொச்சி வடக்கு வலய மாணவர்களுக்கான பயிற்சிப்பட்டறை மேற்கொள்ளப்பட்டது. 12 ஆம் திகதி கிளிநொச்சி வடக்கு வலய மாணவர்களுக்கான பயிற்சிப் பட்டறை கிளிநொச்சி வடக்கு முருகானந்தாக் கல்லூரியில் நடாத்தப்பட்டது. இப்பயிற்சிப்பட்டறைக்கு 90 இற்கும் மேற்பட்ட அவ்வலய மாணவர்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அதேபோல் 13 ஆம் திகதி வவுனியா வடக்கு மாணவர்களுக்கான பயிற்சிப் பட்டறை வவுனியா புளியங்குளம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இப்பயிற்சிப்பட்டறையிலும் 160 இற்கும் மேற்பட்ட அவ்வலய மாணவர்கள் கலந்து கொண்டு தம் ஆர்வத்தினை வெளிப்படுத்தினர். இப்பயிற்சிப் பட்டறையில் மாணவர்களிற்கு Yarl Geek Challenge தொடர்பான அறிமுகம் வழங்கப்பட்டதுடன் ஒவ்வொரு பிரிவுகள் பற்றியும் அறிமுகப் பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் ஒரு வலைத்தளத்தினை உருவாக்குதல், ஒரு செயலியினை உருவாக்குதல், மாணவர்கள் தாம் இனங்காணும் பிரச்சினைக்குரிய தீர்வினை இலகுவாக Hardware application ஊடாக முன்வைக்கும் விதம்,விஞ்ஞானஅறிவினைப் பிரயோகித்து பிரச்சினை ஒன்றைத் தீர்ப்பது பற்றி கருத்துக்கள் முன்வைத்தல், மற்றும் புத்தாக்கத் தயாரிப்பு ஒன்றினை சுயமாக முன்வைத்தல் தொடர்பான அறிமுகப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இவ் அறிமுகப்பயிற்சிப் பட்டறையில் வெவ்வேறு பாடசாலையைச் சார்ந்த மாணவர்கள் பலர் முழு ஈடுபாட்டுடன் பங்குபற்றியதோடு மேலும் அது தொடர்பான சந்தேகங்களைக் கேட்டு தெளிவினைப் பெற்றுக் கொண்டனர்.
6 மணித்தியாலங்கள் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் மாணவர்கள் ஆர்வத்துடன் தமது ஒத்துழைப்பை வழங்கினர். இக்கருத்தரங்கினூடாக இப்போட்டி பற்றிய விளக்கங்களைத் தெளிவாக அனைத்து மாணவர்களிற்கும் வழங்கியதுடன் இப் போட்டி பற்றிய மாணவர்களினுடைய சந்தேகங்களும் தெளிவுபடுத்தப்பட்டது. அத்தோடு இவ்வாறான பயிற்சிப்பட்டறை ஏனைய வலயங்களிலும் முன்னெடுத்துச் செல்வதற்காகத் திட்டமிடப்பட்டுள்ளது.
வரும் வாரங்களில் ஏனைய வலயங்களிலும் yarl Geek Challenge Junior போட்டி தொடர்பான பயிற்சிப் பட்டறைகள் இடம்பெறும். பங்குபற்ற விரும்பும் மாணவர்கள் Yarl IT Hub உடன் தொடர்பு கொள்ளலாம்.
போட்டி தொடர்பான மேலதிக விளக்கங்களுக்கு : https://www.yarlithub.org/ygc/
தொடர்புகளுக்கு : 076 767 3158