YGC ஜூனியர்-10 மதிப்பீடுகள் வலய மட்ட மதிப்பீட்டுடன் ஆரம்பம்
Yarl Geek challenge ஜூனியர் என்பது பாடசாலை மாணவர்களின் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திறனை வளர்க்கும் முகமாக Yarl IT Hub வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யும் புத்தாக்க போட்டி ஆகும். இம்முறை தொடர்ந்து பத்தாவது தடவையாக இப்போட்டிகள் தொடங்கப்பட்டன .
ஆரம்பம்
Covid-19 பெருந்தொற்று காரணமாக இம்முறையும் போட்டிகள் நிகழ்நிலையில் நடாத்த தீர்மானிக்கப்பட்டது. YGC ஜூனியர்- சீசன் 10 அதிகாரப்பூர்வமான அறிவிப்புடன் மார்ச் 10 தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மார்ச் 13 YGC ஜூனியர்- சீசன் 10 அறிமுக அமர்வு நிகழ்நிலையில் இடம்பெற்றது. இதில் மாணவர்களுக்கு YGC பற்றி ஒரு அறிமுகமும் கடந்தகாலங்களில் YGC போட்டிகளில் பங்குபற்றியவர்களின் அனுபவ பகிர்வும் நடைபெற்றது.இவ்வமர்வில், மாணவர்கள் தங்களுடைய சந்தேகங்கள் மற்றும் YGC பற்றிய வினாக்களை வினாவ ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது (மார்ச் 13 அன்று நடைபெற்ற அமர்வுக்கான இணைப்பு: — https://fb.watch/6of3tqQsNx/).
தொடர்ச்சியாக, 2021 ஏப்ரல் 15 ஆம் திகதி, மாணவர்களிடம் இருந்து YGC ஜூனியர் 10 போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன. மாணவர்களின் தொழில்நுட்பம் சார்ந்த அறிவினை மேலும் மெருகூட்டும் விதமாக பயிற்சி பட்டறைகளும் ஒழுங்கு செய்யப்பட்டன. இதன் முதற்கட்டமாக WordPress & Woo Commerce என்பவற்றை பயன்படுத்தி e-commerce வலைத்தளங்கள் உருவாக்குதல் தொடர்பில் 10 மணிநேர பயிற்சி பட்டறை ஒழுங்கு செய்யப்பட்டது. இது தவிர mobile development and hardware application பயிற்சி பட்டறைகளும் நடாத்தப்பட்டன. வழிகாட்டுதல் தேவைப்படும் அணிகளுக்கு வழிகாட்டுதல் அமர்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.
இந்த ஆண்டு, வடக்கு மாகாணம் முழுவதிலும் இருந்து வலய மட்ட போட்டியில் 42 அணிகள் பங்கேற்றன.
வலய மட்ட மதிப்பீடு
வலய மட்ட மதிப்பீடுகள், 2021 ஜூன் 26 சனிக்கிழமையன்று நடைபெற்றது. பயணக் கட்டுப்பாடுகள், பாடசாலைகள் மூடிய நிலை, இணைய இணைப்பில் சிக்கல்கள் மற்றும் தேவையான வன்பொருள் பெறுவதில் சிரமங்கள் போன்ற பல சவால்களுக்கு மாணவர்கள் முகங்கோடுத்தாலும் அச் சவால்களை எல்லாம் தகர்த்தெறிந்து மாணவர்கள் அனைவரும் தத்தமது படைப்புக்களை மிகச்சிறப்பாக காட்சிப்படுத்தினர். அவர்களது சவால்களை முகங்கொடுக்கும் தன்னம்பிக்கை பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். இப்போட்டியில், 31 அணிகள் இறுதிப் போட்டிக்கு தெரிவாகின.
அடுத்து, இறுதிப் போட்டிகள் வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதி நடைபெறும்.